தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் டைரக்டில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக “தளபதி 68” என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 2024-ம் வருடம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி 68 படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தகவலானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.