
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து முக்கியமான பல நிர்வாகிகள் விலகி சென்றனர். பலர் மாற்றுக் கட்சியில் இணைந்த நிலையில் சிலர் கட்சிக்குள் அமைதியாக ஒதுங்கி இருக்கிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன் அதிமுக கட்சியில் இருந்து விலகிய நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனி கட்சியை தொடங்கினார். இவர் பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறி வருகிறார். அதன் பிறகு டிடிவி தினகரன் அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மீண்டும் அதிமுக இணைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்று கூறுகிறார்.
தன்னுடைய சுயநலத்திற்காக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டும் டிடிவி தினகரன் 2026 ஆம் ஆண்டு தேர்தலோடு அதிமுகவுக்கு அவர் மூடு விழா நடத்தி விடுவார். எனவே இனியாவது தொண்டர்கள் அவருக்கு காவடி தூக்குவதை நிறுத்திவிட்டு அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதோடு அதிமுக தப்பிக்க வேண்டுமென்றால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தி வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் எடப்பாடி பழனிச்சாமி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வீணாய் போனவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரைப் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.