திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் தோட்டம் பகுதியில் வசந்த பிரியா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக வசந்த பிரியாவும் அவரது அத்தை மகன் மகாதேவனும்(37) காதலித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாதேவனின் நடவடிக்கைகள் வசந்த பிரியாவுக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவரை திருமணம் செய்ய மறுத்தார். அதன் பிறகு இரு வீட்டாரும் சேர்ந்து ஒருமித்தமாக பேசி திருமணம் வேண்டாம் என முடிவு செய்தனர். நேற்று வசந்த பிரியாவின் பெற்றோர் தங்களது மூத்த மகளை பார்ப்பதற்காக சென்றனர். கல்லூரி சென்று வீடு திரும்பிய வசந்த பிரியா தனியாக இருந்தார். அதை அறிந்த மகாதேவன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு வசந்த பிரியா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த மகாதேவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்த பிரியாவின் கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்தம் சொட்ட ஓடிவந்த வசந்த பிரியாவை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையே மகாதேவன் தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மகாதேவனை தேடி வருகின்றனர்.