ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு பொதுமக்களுக்குக் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கையில், “ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெறும் போது, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குறிப்பாக, ஆர்வத்தில் ஏவுகணைகளைத் தங்களது செல்போன்களில் வீடியோ எடுக்கவோ அல்லது படம் பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம். இது உங்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
வாகனங்களில் செல்பவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான கட்டிடங்களுக்குச் செல்லுமாறும், ஜன்னல்கள் மற்றும் திறந்தவெளிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அரபு, ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை ஈரானில் இருந்து வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தடுத்து அழித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலால் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் ‘பாம் ஜுமேரா’ தீவில் உள்ள சில ஹோட்டல்கள் சேதமடைந்துள்ளன. அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலும் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வந்த மோதல் கடந்த வாரம் உச்சகட்டத்தை எட்டியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மழையைப் பொழிந்து வருகிறது.
தற்போது குவைத் மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் இந்த ஏவுகணை அச்சுறுத்தல் பரவியுள்ளதால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளது.
