கணவன்–மனைவி இடையிலான குடும்பத் தகராறு காரணமாக, கணவரை கத்தியால் காயப்படுத்திய மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் (33) என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து, கணபதி நாராயணசாமி நகர் பகுதியில் வசித்து வந்தார். அத்திப்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பிளம்பர் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஜிண்டி (36). இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பிதானுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஜிண்டி குழந்தையை தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு கோவைக்கு வந்து, கடந்த ஆறு மாதங்களாக கணவருடன் தங்கி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவர் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், பிதான் வேலைக்கு செல்லாமல் இருந்ததாலும் குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்தன.
சம்பவத்தன்று ஜிண்டி வெளியே சென்றிருந்த போது, பிதான் வேறொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென ஜிண்டி வீட்டிற்கு வந்தபோது, இதைக் கண்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பிதான் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறு செய்துவிட்டு தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மன உளைச்சலில் இருந்த ஜிண்டி, கோபத்தின் உச்சத்தில் கணவரை கத்தியால் காயப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த பிதான் வலியில் அலறிய சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜிண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
