இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கிய ஜாக்குவார் தங்கம், தற்போது நடிகர் விஜயகாந்த் குறித்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான தகவலை பகிர்ந்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “1978-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் என்னிடம் சிலம்பாட்டம் கற்றுக்கொள்வதற்காக வந்தார்.
அவரை என் நண்பர், ஃபைட் மாஸ்டர் நெல்லை சுந்தர்ராஜன் வழியாக அறிமுகம் செய்தார். முதலில் என்னை பார்த்த விஜயகாந்த் ‘சின்ன பையன் மாதிரி இருக்கானே’ என்று கேட்டபோது, ‘இவன் கம்புசுற்றல் வித்தையில் வல்லுநர்’ என்று அவரது நண்பர் கூறினார். அதன்பின் சிலம்பாட்டத்தில் எனது திறமையை பார்த்த விஜயகாந்த், ஒரு வாரத்திற்குள் கற்றுக்கொள்வதாக உறுதியுடன் கூறினார்.
ஆனால் ரெகுலராகவே கற்றுக்கொள்கிறேன் என்று 6 மாதம் பயிற்சி பெற்றார்” என தெரிவித்தார். 1971-ல் மாநில அளவில் சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்ற ஜாக்குவார் தங்கம், இதுவரை தனது திரை பயணத்தில் 17,000 விருதுகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“எம்.ஜி.ஆர். தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார். அதனால் அவரின் பெயருடன் இணைந்துள்ள எம்.ஜி.ஆர் நகரில் வீடு வாங்கினேன். வீடு முழுக்க விருதுகள் நிறைந்திருக்கின்றன. மீதமுள்ளவை ஸ்டோரூமில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வீடு முழுக்க இருக்கும் மற்றொரு புகைப்படம் கேப்டனுடையது. அவரை சாமி மாதிரி தான் பார்க்க வேண்டும். அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது” என உருக்கமாக தெரிவித்தார்.
தமிழ் சினிமாவிலும், ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ள ஜாக்குவார் தங்கம், ‘மீனாபஜார்’ என்ற இந்தி படம் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்.
கமல் ஹாசனின் மகராசன், அஜித்-சத்யராஜ் நடித்த பகைவன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றியுள்ள இவர், கடந்த 2008-ல் சூர்யா என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
