திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்ற மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பொதுச்செயலாளர் துரைமுருகன் தாமதமாக வந்ததாகவும், அவரை வரவேற்க யாரும் வராததால் அப்செட்டாகி பாதியிலேயே சோகத்துடன் கிளம்பிச் சென்றுவிட்டார் என்றும் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருக்கும்போதே துரைமுருகன் பாதியிலேயே திரும்பியதாகப் பரவிய இந்த செய்திக்குத் திமுக ஐடி விங் தற்பொழுது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

​சில ஊடகங்கள் உள்நோக்கத்துடன் பரப்பும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்தி இது என்று ஆவேசப்பட்ட திமுக ஐடி விங், “மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கவே அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் துரைமுருகன் தவிர்த்து வருகிறார்” என்று உண்மையை உடைத்துள்ளது. தலைமைக் கழகத்திற்கு வந்த அவர், பணிகள் எப்படி நடக்கிறது என்று பார்த்துவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கவே உடனடியாகப் புறப்பட்டார் என்றும், வீடியோக்களை வெட்டி ஒட்டி தாங்களாகவே பொய்க்கதை எழுதுவது கீழ்த்தரமான செயல், ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்களை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் திமுக ஐடி விங் எச்சரித்துள்ளது.