
திருச்சியில் நடந்த சோகமான விபத்தில், 10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஒரு சிறுவனை மோதியதால் அந்த சிறுவன் படுகாயமடைந்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கூடாது என்ற விதி இருந்தபோதிலும், அந்த மாணவனின் தந்தையான போலீஸ் அதிகாரி, புல்லட் மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதி அளித்ததை பொதுமக்கள் கண்டித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து, பொறுப்புள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மாணவன் மற்றும் அவரது தந்தை மீது மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிறுவனின் தந்தை திருச்சி கே கே நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.