மனுஷன் நடமாட்டமே இல்லை சாமி.. ராத்திரி ஆனா பயமா இருக்கு – பல கோடிகளைப் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து கொட்டித் தீர்த்து, ஒரு சொட்டுப் பயனும் இல்லாமல் பாழடைந்து கிடக்கும் ஒரு நவீன ரயில் நிலையம் தான் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், பிரதான ரயில் நிலையங்களின் நெரிசலைக் குறைப்பதற்காக 5-வது முனையமாக இந்த ‘நிஷாத்புரா’ ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. ஜூன் 2023-லேயே இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் சும்மா பளபளவென அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
சுமார் 6 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தில், கண்ணைக் கவரும் விளக்குகள், சொகுசான இருக்கைகள், பிரம்மாண்ட நடைமேடைகள் என எல்லாமே தயார் நிலையில் உள்ளன. ஆனால், வேதனையான விஷயம் என்னவென்றால், கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், இன்றுவரை இந்த நிலையத்திற்கு ஒரேயொரு பயணிகள் ரயில் கூட வந்து நிறுத்தப்படவில்லை.
தண்டவாளங்கள் இருந்தாலும் சிக்னல்கள் இன்னும் பச்சை காட்டவில்லை! அதிகாரத்துவத்தின் மெத்தனப்போக்கால் ரயில்வேயின் ‘டைம்-டேபிள் ஸ்டாப்பேஜ்’ ஒப்புதல் மற்றும் ஊழியர்கள் நியமனம் ஆகியவை இறுதிவரை இழுபறியிலேயே நீடிக்கிறது.
இதன் காரணமாக, பகல் நேரத்தில் ஆடுகளும் மாடுகளும் மேயும் இடமாக மாறும் இந்த ரயில் நிலையம், இரவு நேரங்களில் கும்மிருட்டில் மூழ்கி ஒட்டுமொத்தமாகப் பேய் பங்களா போலக் காட்சியளிக்கிறது. ஊழியர்களோ, பயணிகளோ யாரும் இல்லாததால் சுற்றிலும் மரண அமைதி நிலவுகிறது.
இதனால் பயந்துபோன உள்ளூர் மக்கள், “மாலை நேரத்திற்கு மேல் இந்த ரயில் நிலையத்தின் பக்கம் போனாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது, ஏதோ ஒரு விவரிக்க முடியாத பயம் தொற்றிக் கொள்கிறது” எனத் திகிலோடு கூறுகின்றனர். தற்போது இந்த வெறிச்சோடிய ‘பேய் ரயில் நிலையம்’ த்ரில் தேடும் நெட்டிசன்களின் ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
