திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் தனியார் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பொருத்தி அதிக ஒலி எழுப்புவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதரன் நாயர் பழனி பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் சோதனை செய்தனர். அப்போது 5 தனியார் பேருந்துகளில் ஏர்ஹாரன்களை பொறுத்தி இருந்தது தெரியவந்தது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து இனிமேல் ஏர் ஹாரன்களை பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து அலுவலர் கூறியதாவது, விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட மூன்று ஆட்டோக்கள், உரிமம் புதுப்பிக்காத 2 தனியார் பள்ளி வேன்கள், அதிகபாரம் ஏற்றி சென்ற 11 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.