தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி.ஜெட்டி அள்ளி பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஸ்ரீதரன் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தர்மபுரியில் இருக்கும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பல்வேறு தவணைகளாக தர்மபுரியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் 39 லட்ச ரூபாயை வட்டிக்கு வாங்கினேன்.

அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 37 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளேன். இதனையடுத்து கடனுக்கு ஈடாக கையொப்பமிட்ட பூர்த்தி செய்யப்படாத தேதி குறிப்பிடாத 8 காசோலைகள், வெற்றி பத்திரங்கள், எனது பெயரில் இருக்கும் அசல் நிலப்பத்திரம் ஆகியவற்றை கடன் கொடுத்த தம்பதியினர் வாங்கி கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கடன் தொகையில் ஏற்கனவே செலுத்திய தொகை போக மீதமுள்ள தொகையை தருகிறேன் என அவர்களிடம் கூறினேன்.

அதற்கு அவர்கள் நான் கொடுத்த தொகை வட்டிக்கே சரியாகிவிட்டது. நான் வாங்கிய கடனுக்கு 4 ரூபாய் வட்டி தர வேண்டும் எனவும், அதனை தவறினால் ஒரு நாளுக்கு மீட்டர் வட்டியாக தர வேண்டும் எனவும் மிரட்டுகின்றனர். எனது குடும்பத்தை கொலை செய்து விடுவதாக கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.