குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்..

தமிழக சட்டப்பேரவையில் 2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில்  சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் விடியா திமுக அரசின் கானல் நீர் பட்ஜெட். விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் கானல் நீர் பட்ஜெட் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன். தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகள் குறித்து வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு அறிவிக்கவில்லை.

நெல், கரும்பு ஆதார விலை குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்து சேதமடைந்துள்ளன. தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. காலம் தாழ்த்தி நீர் திறக்கப்பட்டதால் சம்பா தாளடி பயிர்கள் காய்ந்து சேதம் அடைந்துள்ளன. குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு அரவை ஆலைகளை உரிய காலத்தில் இயக்க தவறியதால் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகள் செல்கின்றன. தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீர் செய்து கொடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்க சர்க்கரை ஆலைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நீண்ட கால வளர்ச்சி திட்டங்களோ, நிதி நிலையை சீராக்கும் முயற்சிகளோ, நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை. விடியா திமுக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. பயிர் காப்பீடு திட்டத்தில் குருவை சாகுபடி சேர்க்கப்படாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.மேகதாத அணை விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை.

விடியா திமுக ஆட்சியில் 2021 -2022 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூபாய் 46 538 கோடியாக உள்ளது. வருவாய் பற்றாக்குறையை முழுமையாக அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை உயர்கிறது. விடியா திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகள் முடிவடையும்போது தமிழகத்தின் கடன் தொகை 5 லட்சம் கோடியாக உயர்ந்து விடும்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். பதநீர் இறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது?. கல்வியில் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியது சாதனை என கூறுகிறார் ஸ்டாலின். கடந்த 3 ஆண்டுகளில் இந்த நிலையை எட்டி விட்டாரா?, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக அரசின் கொள்கைகளும் திட்டங்களும், கல்வி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதை மறைத்து விட்டார்” என தெரிவித்தார்.