சென்னை வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் புதிய அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய அவர், ஜனநாயகத்தில் மக்களே தலைவர்கள் என்றும், தங்களை யார் ஆள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
திமுகவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியல் காரணமாக, அவர்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், தமிழக மக்களின் இந்த அதிரடி முடிவை தான் வரவேற்பதாகக் கூறினார். மேலும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குத் தனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய முதலமைச்சர் விஜய் அவர்கள், நாட்டை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவதில் உறுதியுடன் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்படுவார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தை சிபிஐ அதிகாரிகள் மிக விரிவாக விசாரித்து வருவதாகவும், விசாரணை இன்னும் முடிவடையாததால் விரைவில் முழு உண்மைகளும் வெளிவரும் என்றும் கூறினார்.
