தவெக தலைவர் விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி. செல்வக்குமார், இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலப்பை இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையப்பட்டனர்.

பி.டி. செல்வக்குமார், 27 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜயின் மேலாளராகச் செயல்பட்டவர். கன்னியாகுமரியைச் சேர்ந்த இவர் ‘கலப்பை’ மக்கள் இயக்கத்தை தொடங்கி தலைவராக இருந்து வந்தார். மேலும் 2015 ஆம் ஆண்டு வெளியான புலி படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.

இந்நிலையில், சமீபத்தில் விஜயை விட்டு விலகிய பி.டி. செல்வக்குமார், திமுகவில் இணைந்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: “ஒரு தனி இயக்கமாக இருந்து மக்களுக்கு அதிக நன்மைகள் செய்ய முடியாது. அதற்கு அதிகாரமும் நல்ல அரசும் தேவை. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவது என்னை ஈர்த்தது. அதனால் இன்று திமுகவில் இணைகிறேன்.” என்றார்.

விஜயை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் மக்கள் இயக்கம் உருவாகும் காலத்தில் நான் ஒரு தூணாக இருந்தேன். ஆனால் புதிதாக பலர் வரும்போது, பழைய நம்பிக்கைக்குரியவர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போனது. அங்கு உள்ள சிலர் காரணமாக நல்லவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், விஜய் ஒரு நிலா மாதிரி—சில நாட்கள் பிரகாசிப்பார்; சில நாட்கள் காணாமற்போவார். ஆனால் சூரியன் போன்ற தலைமையே மக்களுக்கு தொடர்ந்து இருக்கும். விஜய் மக்களுக்கு நல்லது செய்வாரா என்பது தெரியவில்லை.” என்று கூறிய அவரது கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

பி.டி. செல்வக்குமார் திமுகவில் இணைந்ததை அடுத்து, வரும் 2026 தேர்தலை முன்னிட்டு நடக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் இந்த முன்னேற்றம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.