தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) பெற்றுள்ள மாபெரும் வெற்றியை மூத்த நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் மனதாரப் பாராட்டியுள்ளார். “விஜய் எப்படி ஜெயித்தார், எதற்காக ஜெயித்தார் என்ற கேள்விகளுக்கு இனி இடமே இல்லை. மக்கள் விரும்பினார்கள், அவரைத் தேர்ந்தெடுத்தார்கள்; ஆர்கியூமென்ட் க்ளோஸ்டு (Argument Closed)” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்திருந்ததாகவும், தேங்கிக் கிடந்த அரசியல் தண்ணீரை அடித்துச் செல்லும் புது வெள்ளமாக மக்கள் விஜய்யைத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், விஜய்யின் குடும்பத்தை நீண்டகாலமாகத் தமக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், விஜய் மதச் சார்பின்றியும், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றியும் அனைவருக்கும் சமமான நீதியை வழங்குவார் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். “பாலைவனமாகிவிட்ட தமிழ்நாட்டை மீண்டும் ஒரு சோலைவனமாக்க வேண்டும்” என்று விஜய்க்கு வேண்டுகோள் விடுத்த அவர், ஒரு சாதாரணக் குடிமகனாக இந்தப் புதிய தலைமையைப் பாராட்டுவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.