தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் நாளை சென்னை கோவளத்தில் தவெக தோழமை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை எதிர்கொள்வது குறித்துப் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காகத் தவெக ஆட்சிக்கு ஏற்கனவே தங்களது முழு ஆதரவை வழங்கி, தவெக-வுடன் நல்ல இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் இடதுசாரி (கம்யூனிஸ்ட்) கட்சிகளுக்குத் தற்பொழுது தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின்படி, தவெக அமைச்சர்களான புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இன்று இடதுசாரி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, நாளை கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழை அவர்கள் முறைப்படி வழங்கினர்.
ஏற்கனவே விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட முக்கியத் தோழமை கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், தவெக-வுக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகளுக்கும் இந்த முக்கிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
