தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியான ரஞ்சனா, அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களைச் சுற்றி ஒரு கண்ணுக்குத் தெரியாத ‘மர்ம சுவர்’ இருப்பதாகப் புகார் எழுப்பியது தவெக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் சொந்தத் தாய், தந்தை கூட அவரைச் சுலபமாகச் சந்திக்க முடியாதபடி இடையில் ஒரு நபர் தடையாக நிற்பதாகவும், அந்த மர்ம நபர் யார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஒரு கட்சித் தலைவர் தனது சொந்தக் குடும்பத்தினரையே சந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கட்சிக்குள் ஏதோ ஒரு மர்மம் நீடிப்பதை உணர்த்துவதாக அவர் சாடியுள்ளார்.

​மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாபெரும் ஆளுமைகள் கூடப் பொது இடங்களுக்கு வரும்போது கார் கண்ணாடியை இறக்கித் தனது ரசிகர்களைப் பார்த்து அன்புடன் கையசைப்பார்கள்; ஆனால் விஜய் அதைக்கூடச் செய்ய மறுப்பது ஏன் என்று ரஞ்சனா கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்களையும், தொண்டர்களையும் மதிக்காத ஒரு நபர் எப்படி ஒரு மாநிலத்தின் தலைவராக முடியும் என்ற விவாதத்தை ரஞ்சனாவின் இந்தப் பேட்டி கிளப்பியுள்ளது. தவெக-வில் நிலவும் இந்த உட்பூசல் மற்றும் மர்ம நபர் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.