எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஏற்கனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகும் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது தயாரிப்பு தரப்புக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

மேலும், படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால், அதன் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அழுத்தம் கொடுத்து வருவது தயாரிப்பு நிறுவனத்திற்குப் புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய ‘ஜனநாயகன்’ திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாக முடியாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், அடுத்த இரண்டு நாட்களில் தீர்ப்பு வரும் என்றும், அதன் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தில் விஜய் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.