விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதமாவதைக் கண்டித்து, ராகுல் காந்தி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு தணிக்கை வாரியத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் குரலை ஒடுக்க நினைப்பதாக அவர் விமர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த ஆதரவுப் பதிவு, காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப் போகிறதோ என்ற விவாதத்தைக் கிளப்பியது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விஜய்யுடன் நெருங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் ஆதரவுப் பதிவுக்கும் கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளாரே தவிர, இது அரசியல் கூட்டணியாக மாறாது என்றும், தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணி வலுவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல உரிமை உண்டு என்றும், ராகுல் காந்தியின் வருகைக்கும் தேர்தல் கூட்டணிக்கும் முடிச்சு போடத் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.