தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெறுகிறது.

இந்த கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்று காலை 7:00 மணி முதல் நிர்வாகிகள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.சுமார் 2150 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கு முன்னதாகவே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது சுமார் 10 முதல் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் தேதியையும் இன்று அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தின் வருங்கால முதல்வர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. நடிகர் விஜயை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக வெற்றிக்கழகம் 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கிறது. இப்படி இருக்கையில் வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் என்று தமிழக வெற்றி கழகத்தினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.