விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இவர் சொன்ன அதே கருத்தை தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கிய விஜய் முதல் மாநாட்டின் போது சொன்னார். அதாவது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று விஜய் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு கொடுத்தது. அதன்பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திருமாவளவன் அதனை மறுத்த நிலையில் திமுக கூட்டணியில் என்றென்றும் தொடர்வோம் என்று விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு உண்டு என்று திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அறிவித்தால் மட்டும்தான் அது நடைமுறையில் சாத்தியமாகும் என்றும் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அறிவிப்பதால் அது சாத்தியமாகாது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று திருமாவளவன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். மேலும் அவர் தற்போது பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியதால் தமிழக வெற்றி கழகத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.