உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மகளை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்லி மாவட்டத்திலுள்ள அம்பிதா கிராமத்தை சேர்ந்தவர் ஷல்பன். இவருக்கு முஸ்கன் (வயது 17) என்ற மகளும், 15 வயது மகனும் உள்ளனர். பிளஸ்-2 வகுப்பு படித்து வந்த முஸ்கன், அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தெரிந்ததும், தந்தை ஷல்பன் தனது மகளை கண்டித்து, அந்த இளைஞருடன் தொடர்பை உடனடியாகக் கைவிடும்படி எச்சரித்தார். இருப்பினும், முஸ்கன் தொடர்ந்து தனது காதலனுடன் செல்போன் வாயிலாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம், முஸ்கன் மீண்டும் காதலனுடன் பேசுவதை பார்த்த தந்தை ஷல்பன் கடும் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து, அவர் தனது மகளை வீட்டின் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த பயங்கரச் சம்பவத்தில் முஸ்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலைக்கு ஷல்பனின் 15 வயது மகனும் தந்தைக்கு உதவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ஷல்பன் மற்றும் அவரது சிறுவயது மகனை கைது செய்துள்ளனர். போலீசாரிடம் விசாரணையில், “மகள் காதலித்து, குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தினாள் என்பதால் கோபத்தில் இந்த முடிவை எடுத்தேன்” என ஷல்பன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.