
புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஹரியின் மகன் அஜய் (22), கடந்த ஜூன் 27ஆம் தேதி “நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு டூருக்கு செல்கிறேன்” என்று கூறி வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், உண்மையில் அவர் செங்குன்றத்தைச் சேர்ந்த சரித்திர குற்றவாளியான அபினேஷ் என்பவருடன் சேர்ந்து ஒடிசா மாநிலத்துக்கு கஞ்சா வாங்க சென்றுள்ளார். அங்கு, 3 கிலோ கஞ்சாவை ஒரு குழுவிடமிருந்து வாங்கிய பிறகு ரயில்வே பாதையில் நடந்து சென்றபோது, மற்றொரு ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை துரத்தி வந்துள்ளது.
இந்த தாக்குதலில் அபினேஷ் தப்பி ஓடினார். ஆனால், அஜய் அந்த கும்பலிடம் சிக்கினார். பின்னர் அந்த கும்பல், அஜய்யை உயிருடன் விட ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என அவரது வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து மிரட்டினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் புல்லரம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தனர். பிறகு அஜய்யின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதை தொடர்ந்து சந்தேகம் அதிகரிக்க, போலீசார் அபினேஷை பிடித்து விசாரித்தனர். அதில், அஜய் கொலை செய்யப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டார் எனத் தெரியவந்துள்ளது.
“கொடைக்கானலுக்கு போவதாக சொல்லிவிட்டு ஒடிசா ஏன்?” எனக் கேள்வி எழுப்பிய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், திருவள்ளூர் – புல்லரம்பாக்கம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். “அவரது உடலை மீட்டுத் தர காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கஞ்சா வாங்கிய குழுவிற்கும் எதிர்வரும் குழுவிற்கும் இடையே முன் விரோதம் இருந்ததால், “எங்களிடம் வாங்காமல் ஏன் மற்றவர்களிடம் வாங்கினீர்கள்?” என்று மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னணியிலேயே பணம் கேட்டு மிரட்டியும், முடிவில் கொலை செய்தும் உள்ளனர். தற்போது கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரைக் போலீசார் தேடி வருகின்றனர்.