சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் உலா வந்தாலும், மனிதநேயத்தை பறைசாற்றும் சில காட்சிகள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் நெகிழச் செய்துவிடுகின்றன. அந்த வகையில், டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் சாலை ஓரமாக அமர்ந்து ஏழை மூதாட்டி ஒருவர் பேனாக்களை விற்றுக் கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து யாரும் பேனாக்களை வாங்க முன்வரவில்லை.

அப்போது அந்த வழியாக வந்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடகக் கலைஞர் (Content Creator) ஸ்டீவ் யாலோ, அந்த மூதாட்டியின் நிலையைப் பார்த்துக் கலங்கினார். உடனடியாக அவரிடம் சென்று ஒரு பேனாவின் விலையைக் கேட்க, மூதாட்டியும் சைகை மூலம் அதன் விலை 50 ரூபாய் எனக் கூறினார். உடனே ஸ்டீவ் 100 ரூபாயைக் கொடுத்து இரண்டு பேனாக்களை வாங்கினார்.

அத்துடன் நிறுத்தாமல், அந்த மூதாட்டியின் எதார்த்தமான புன்னகையைக் கண்ட ஸ்டீவ், அவரிடம் இன்னும் ஏராளமான பேனாக்கள் விற்காமல் இருப்பதை உணர்ந்தார். உடனே தனது பையிலிருந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் எடுத்து எண்ணிப் பார்த்தபோது அவரிடம் 550 ரூபாய் இருந்தது. அந்தப் பணம் முழுவதையும் அந்த மூதாட்டியிடமே கொடுத்த ஸ்டீவ், தனக்காக வெறும் இரண்டு பேனாக்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதமிருந்த அனைத்துப் பேனாக்களையும் அந்த மூதாட்டியிடமே திருப்பி ஒப்படைத்தார்.

https://www.instagram.com/reel/DZb6hXAuDVa/?igsh=MTZiYnpqdzUyZTRwaw==

இந்த நெகிழ்ச்சியான வீடியோவை ஸ்டீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. “நாம் செய்யும் ஒரு சிறிய உதவி, மற்றவர்களின் ஒட்டுமொத்த நாளையும் மகிழ்ச்சியாக மாற்றிவிடும்” என்றும், “இதன் மூலம் மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பது நிரூபணமாகியுள்ளது” என்றும் நெட்டிசன்கள் பலரும் அமெரிக்க வாலிபரை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.