
விழுப்புரம் மாவட்டம் வே.அகரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாது சுந்தர் என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சாது சுந்தர் சக மாணவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது உடல் கல்வி ஆசிரியரான செங்கேணி என்பவர் இரண்டு மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் அவர் சாது சுந்தரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
இதனால் வலி தாங்க முடியாமல் சாது சுந்தர் அழுது கொண்டே இருந்துள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவனை குச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது சாது சுந்தரின் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனை கேட்டு மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் மாணவனின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்பு சுந்தருக்கு தலைவலி கூட வந்தது கிடையாது. ஆனால் உடற்கல்வி ஆசிரியர் பெரம்பால் தலையில் தாக்கியதால்தான் ரத்த கசிவு ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமியை பணியிட மாற்றம் செய்தார். மேலும் உடற்கல்வி ஆசிரியர் செங்கேணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள செங்கேணியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.