தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி கூட்டணியாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் நடிகர் மன்சூர் அலிகானின் ‘ஜனநாயக புலிகள்’ கட்சி இணைந்துள்ளது. சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த மன்சூர் அலிகான், நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வருங்கால முதல்வர் எடப்பாடியைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி” என புகழாரம் சூட்டியதுடன், கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
மேலும், தனது பாணியிலேயே அதிரடியாகப் பேசிய மன்சூர் அலிகான், “வரும் தேர்தலில் எங்களது பிரசாரம் ஏவுகணைகளாகவும், எறிகுண்டுகளாகவும் எதிரிகள் மீது பாயும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி என்றும், எந்தத் தொகுதி என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகானின் இந்த திடீர் வருகை அதிமுக கூட்டணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
