திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களில் இருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி கனிமொழி, திரு எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவு படுத்த கூடுதலாக மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு ஏ.வ. வேலு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ் ராஜகண்ணப்பன், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி ஆகிய அமைச்சர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியமித்துள்ளார்.

மேலும் கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தின் சோசியல் மீடியா மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ் அப் எண் : 8148539914 மற்றும் ‘ட்விட்டர்’ மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

வாட்ஸ்அப் எண் : 8148539914

டிவிட்டர் : Username – @tn_rescuerelief, @tnsdma 

facebook id : @tnsdma