தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் சளி மற்றும் இருமலுடன் கூடிய வியாதி பரவுவதால் அதில் மாட்டிக்கொண்டு மூன்று மாத காலம் எங்கும் போகாமல் இருந்தேன்.

சட்டசபைக்கு போனால் கூட ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு அமர்ந்து விடுவேன். அப்படி இருந்த என்னை பொதுக்கூட்டத்திற்கு ராஜா அழைத்துள்ளார். வேறு யாராவது அழைத்திருந்தால் கண்டிப்பாக சென்று இருக்க மாட்டேன். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அழைத்தால் செல்லாமல் இருக்க முடியுமா.? அதனால்தான் உடனே வந்து விட்டேன்.

நீங்கள் அனைவரும் திமுக அரசின் சாதனைகளை நிச்சயம் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் மொத்தம் இரண்டு கலாச்சாரங்கள் இருக்கிறது. அதில் ஒன்று வடநாட்டு கலாச்சாரம். அது நமக்கு மிகவும் அசிங்கமான கலாச்சாரம். நாம் பண்பாடு மிக்கவர்கள். நாடாளுமன்றத்தில் வைத்து ஒரு அமைச்சர் நம்மளை பார்த்து நாகரிகம் அற்றவர்கள் என்று கூறுகிறார். வட மாநிலத்தவர்கள் குளிக்கவே மாட்டார்கள். ஆனால் நம்முடைய தமிழர்கள் ஒரு நாளைக்கு இருவேளை குளிப்பார்கள். வடமாநிலத்தவர்கள் குளிக்காமல் இருப்பது பற்றி ஒரு கதை கூறினால் அப்படிப்பட்ட கேவலமான பிறவி நீங்கள். ஆனால் நீங்கள் நாடாளுமன்றத்தில் தமிழர்களை பார்த்து நாகரிகம் அற்றவர்கள் என்கிறீர்கள்.

தமிழகத்தில் இருப்பது மொத்தம் அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டும் தான் என்று கூறினார். மேலும் முன்னதாக வடமாநில பெண்கள் ஒருவர் 10 ஆண்களை கூட திருமணம் செய்து கொள்வார்கள் ஒருத்தன் போனால் இன்னொருவன் என்று அவர்களுடைய கலாச்சாரம் இருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது வடமாநிலத்தவர்கள் குளிக்கவே மாட்டார்கள் என்று கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.