வடகொரியா நாடு அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு தன்னுடைய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்ட காலமாக அச்சுறுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டின் ஹொக்கைடா மகானத்தின் மேற்கு ஓஷிமா தீவு அருகே விழுந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “இந்த ஏவுகணை அதிகாலை 5.21 மணிக்கு ஏவப்பட்டு 66 நிமிடங்கள் வானில் பறந்து 6.27 மணிக்கு கடலில் விழுந்துள்ளது. மேலும் இது 200 கிலோமீட்டர் தொலைவு வானில் பறந்து சென்று கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வடகொரியா அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த ஏவுகணை தொடர்பாக கூறியதாவது “எங்களின் ஏவுகணை சோதனையானது வடகொரியாவின் எதிர்த்தாக்குதல் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை முழு திறனை எட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.