புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி ஒன்று உடைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவத்தில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் அதனை மறுத்ததோடு அந்த செய்திகளில் உண்மை கிடையாது என்று தெளிவு படுத்தினர். அதோடு இந்த விவகாரம் குறித்து தவறான செய்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மே 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வடகாடு விவகாரத்தில் போலீசாரின் அறிக்கை என்பது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருப்பதாக தற்போது கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

புதுக்கோட்டையில் உள்ள வடகாடு சம்பவம் தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி அளிக்கறது. அந்த கோவிலின் தேரோட்டத்தின் போது ஆதிதிராவிடர்கள் தேரை தொட்டு வணங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் கோவில் திருவிழாவின்போது ஆதிதிராவிடர்கள் தேரை தொட்டு வணங்கினர்.

அப்போது அவர்களை அவமதித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்தாமல் காவல்துறை ஒரு நிலைப்பாட்டை எடுப்பது சரியல்ல. இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது போலீசாரின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது பரபரப்பாக பேசப்படுகிறது.