தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு இந்த 4 மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தெற்கு இலங்கையில் இருந்து  தென்மேற்கு வங்க கடலில் இருந்து தெற்கு ஆந்திராவை ஒட்டி காற்றழுத்ததாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆரஞ்சு  அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை என்பது 12 சென்டிமீட்டரில் இருந்து 21 சென்டிமீட்டருக்கு உள்ளாக ஒரு பகுதியாக 24 மணி நேரத்திற்குள்ளாக மழை பொழிய வாய்ப்புள்ளது. அதுவே 21 சென்டிமீட்டருக்கு மேல் பெய்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்படும். அந்த வகையில் வட கடலோர மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாகும். சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தற்போதைய வானிலை எப்படி இருக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிற்பகல் ஒரு மணி வரைக்கும்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் எனவும், ஒரு சில நேரங்களில் அது கனமழையாகவும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இது பிற்பகல் ஒரு மணி வரைக்கும், பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.