மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், பால்கனியில் சிக்கிக்கொண்ட இரண்டு இளைஞர்கள், ஆன்லைன் டெலிவரி ஊழியரின் உதவியுடன் சாதுர்யமாக மீட்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புனே நகரைச் சேர்ந்த மிஹிர் கஹுகர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும், இரவு நேரத்தில் தங்களது வீட்டின் பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பால்கனியின் கதவு உட்புறமாகத் தானாகவே பூட்டிக்கொண்டது. அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் மீண்டும் வீட்டிற்குள் செல்ல முயன்றபோதுதான், தாங்கள் பால்கனியில் சிறைபட்டிருப்பதை உணர்ந்தனர்.

வீட்டிற்குள் அவர்களது பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்களை எழுப்பி அதிர்ச்சியடையச் செய்ய விரும்பாத அந்த இளைஞர்கள், காவல்துறையையோ அல்லது தீயணைப்புத் துறையையோ அழைக்காமல் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mihir Gahukar (@mihteeor)

உடனடியாக ஒரு ஆன்லைன் உணவு விநியோகச் செயலி (Food Delivery App) மூலம் ஒரு பொருளை ஆர்டர் செய்தனர். சிறிது நேரத்தில் டெலிவரி ஊழியர் வீட்டின் வாசலுக்கு வந்து சேர்ந்தார். மாடியில் இருந்து அவரிடம் தங்களது இக்கட்டான நிலையை விளக்கிய இளைஞர்கள், வீட்டின் மாற்றுச் சாவி இருக்கும் இடத்தைக் கூறி அதனை எடுக்கச் செய்தனர். அந்தச் சாவியைக் கொண்டு டெலிவரி ஊழியர் கதவைத் திறக்க, பால்கனியில் சிக்கியிருந்த நண்பர்கள் பத்திரமாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

இந்தச் சம்பவத்தை முழுமையாக வீடியோ எடுத்த மிஹிர் கஹுகர், அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “சரியான நேரத்தில் வந்து உதவிய அந்த டெலிவரி ஊழியருக்குப் பெரிய நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், “அந்த இளைஞர்களின் சாதுர்யமான யோசனை வியக்க வைக்கிறது” என்றும், “டெலிவரி ஊழியர்களின் சேவை அளப்பரியது” என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.