
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அறைக்குள் கைப்பேசி, கைகடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இதேபோல கம்மல், மூக்குத்தி, பெல்ட், முழுக்கை சட்டை அணியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வு மையத்தில், முறையான ஏற்பாடுகள் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேரம் தாழ்த்தி மாணவிகளை அறைக்குள் அனுமதித்ததாகவும், அறைக்குள் கடிகாரம் எதுவும் இல்லை என்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.