அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அதிரடியாகப் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. இந்த நியமனங்களுக்காகப் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆளும் தரப்பு அமைச்சர்கள் மீதே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் பெயரைப் பயன்படுத்தி வழக்கறிஞர்களான லெனின் ஜெயபாலன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக அந்தப் புகாரில் பரபரப்புக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் ஒருவரும் அமைச்சருக்கு எதிராகப் புகாரளித்திருந்த நிலையில், தற்போது திமுகவும் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடியிருப்பது அமைச்சர்கள் இருவருக்கும் புதிய சட்டச் சிக்கலையும், அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
