பாகிஸ்தான் தோல்வியால் ஜமான் கான் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2023 ஆசிய கோப்பையை வெல்லும் பாகிஸ்தானின் கனவு இம்முறையும் தகர்ந்து போனதால், பாபர் அசாம் மற்றும் அணியினரால் இறுதிப் போட்டிக்கு வர முடியவில்லை. சூப்பர் 4 போட்டியின் மிகவும் பரபரப்பான ஆட்டத்தில், பாகிஸ்தானின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த இலங்கை, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போது இறுதிப் போட்டியில் இலங்கை இந்தியாவை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, அதன் வீரர்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றமடைந்தனர். அவர்களுக்கு தோல்வியை நம்புவது மிகவும் கடினமாக இருந்தது. அனைவரின் முகமும் வெளிறி இருந்தது. பாகிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் தன்னைகட்டுப்படுத்த முடியாமல் மைதானத்தில் கதறி அழுதார். அது வேறு யாருமல்ல வேகப்பந்து வீச்சாளர் ஜமான் கான் தான் இலங்கைக்கு எதிரான தனது முதல் போட்டியில் விளையாடினார்.

மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ஓவர்களைக் குறைத்து, 45-45 ஓவர் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பின்னர் மீண்டும் மழை பெய்ததால், நடுவர்கள் 42 ஓவர் போட்டியை நடத்த முடிவு செய்தனர். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. இலங்கையின் வெற்றிக்கு 253 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் விதியின் கீழ் இலங்கை அணிக்கு 252 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சில நேரங்களில் இலங்கையும், சில சமயங்களில் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டில் இருந்தன. கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தானுக்காக அறிமுகப் போட்டியில் விளையாடிய ஜமான் கான் கையில் பந்து இருந்தது. அவர் சிறப்பாக பந்து வீசினார், ஆனால் 5வது பந்து  அசலங்காவின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி  கீப்பருக்கும், பீல்டருக்கும் இடையே பவுண்டரிக்கு சென்றது. அந்த பந்து கேட்ச் கூட ஆகியிருக்கலாம், இல்லையேல் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் லக் நேற்று பாகிஸ்தான் பக்கம் இல்லை.

ஜமான் கான் மைதானத்தில் அழத் தொடங்கினார் :

இப்போது இலங்கையின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அசலங்கா தனது அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதில் வெற்றியடைந்தார், அவர் 2 ரன்கள் எடுத்தவுடனேயே, இலங்கை ஆசியக்கோப்பை  இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால் ஜமான் கான் மனமுடைந்து தரையில் அமர்ந்தார். அவர் தலையை தரையில் சாய்த்தார். கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர் அழுது கொண்டிருந்தார். அப்போது சக வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூற முயன்றார். மற்ற வீரர்களும் அவருக்கு ஆறுதல் கூறினர். ஜமான் கான் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெவிலியனில் இருந்த ஹாரிஸ் ரவூப்பும் மிகுந்த கவலையடைந்தார். ஒட்டு மொத்த அணியும் மனமுடைந்தது. இருப்பினும் இதிலிருந்து மீண்டு அவர்கள் உலக கோப்பைக்கு வலுவாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் காயத்தால் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

இதுவரை பாகிஸ்தானால் 2 முறை மட்டுமே ஆசிய கோப்பையை கைப்பற்ற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக 2000ஆம் ஆண்டு கோப்பையை வென்றது. அதன் பிறகு அவர்களால் ஆசிய கோப்பையை வெல்ல முடியவில்லை. இம்முறை இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை மீண்டும் அவர்களது கனவை சிதைத்துள்ளது.

https://twitter.com/wagonR1328/status/1702616254023131535