
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு அவரது குடும்பத்தினர் அவர் ஆசைப்பட்டார் என்பதற்காக இரு சக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கி கொடுத்துள்ளனர். முதலில் ஐந்தாயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி வாகனத்தை எடுத்தனர். ஆனால் இரண்டு தவணைகளை கட்டாததால் தனியார் வங்கி ஊழியர்கள் அந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அந்த வாலிபர் வங்கி முன்பு அமர்ந்து எவ்வளவோ மன்றாடி கேட்டும் வாகனத்தை திரும்ப தரவில்லை.
இதனால் அந்த வாலிபர் வங்கி முன்பு கதறி அழுதார். வங்கி விதிமுறைகளின் படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். வங்கி முன்பு அமர்ந்து மகன் கதறி அழுததை பார்த்ததும் பெற்றோர் இரண்டு தவணையில் ஒரு தவணையை செலுத்தி விடுவதாகவும் வாகனத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கும் வங்கி ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வாலிபரின் தாய் அளித்த பேட்டியில், என் அம்மா பையன் வண்டி கேட்கிறான் என்று ஆசைப்பட்டு எடுத்து கொடுத்து விட்டார்கள். வண்டிக்கு 5000 ரூபாய் முன் பணம் கட்டியாச்சு. ஒரு தவணை கட்டியாச்சு. அதன் பிறகு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தவணை தொகையை கட்ட முடியவில்லை என்று கூறினோம். இரண்டு பேர் எங்கள் வீட்டிற்கு வந்து தவணையை கட்டுமாறு கூறினார்கள். அப்போது 30-ஆம் தேதி ஒரு தவணை கட்டிவிடுகிறேன் என்று சொன்னேன்.
ஆனால் அவர்கள் வண்டியை பறிமுதல் செய்து விட்டார்கள். இரண்டு தவணையும் கட்டினால் தான் வாகனத்தை தருவோம் என கூறுகின்றனர். என் மகன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான். கொஞ்சம் மனமிறங்கி உதவி செய்யுங்கள் என்று தனியார் வங்கி ஊழியர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் அதெல்லாம் பண்ண முடியாதுன்னு கூறிவிட்டார்கள் என வாலிபரின் தாய் பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.