ஒடிசா மாநிலத்தில் வெறும் 6,000 ரூபாய் ஆரம்ப சம்பளத்தில் பணியில் சேர்ந்த அரசு நிர்வாகப் பொறியாளர் ஒருவரிடமிருந்து, 83 ஏக்கர் நிலம், 5 அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வர் சபர். இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் (சாலைகள் மற்றும் கட்டடங்கள் பிரிவு) இளநிலைப் பொறியாளராக ரூ.6,000 மாதச் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் 2013-ல் உதவிப் பொறியாளராகவும், 2024 மார்ச் மாதத்தில் நிர்வாகப் பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
இவரது சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சபர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 6 இடங்களில் அதிகாரிகள் இந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த சொத்துக்களைக் கண்டு சோதனை நடத்திய அதிகாரிகளே திகைத்துப் போயினர். அதன்படி சோதனையில் வெவ்வேறு 97 இடங்களில் பரவிக்கிடக்கும் 83 ஏக்கர் நிலங்கள். 5 பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் ஒரு வணிக வளாகம் . மொத்தம் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 2 சொகுசு பண்ணை வீடுகள் மாறும் ரூ.10.72 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ஒரு சொகுசு கார் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் போன்றவைகளாகும்.
கலகாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் சபருக்கு இரண்டு முறை பதவி உயர்வு கிடைத்தும், கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் அவர் தனது சொந்த மாவட்டத்தை விட்டு வேறு எங்கும் மாற்றலாகவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கலகாண்டி மற்றும் நபராங்பூர் ஆகிய மாவட்டங்களில் இவ்வளவு பெரிய சொத்துக் குவியலை சேர்த்துள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஊழல் தடுப்புச் சட்டம் 2018-ன் கீழ் புவனேஸ்வர் சபர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் சமீபகாலமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கையும் ஒடிசா அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
