“அம்மா, நான் பெரும் மன உளைச்சலில் இருக்கிறேன்…” என்ற தீபிகா நாகரின் இந்த இறுதி வார்த்தைகள், அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஆறாத் துயரமாக மாறியுள்ளன. கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது, தீபிகா தனது தாயிடம் இந்தத் துயரத்தைப் பகிர்ந்துள்ளார். ஆனால், குடும்பத்தினர் இதனை வழக்கமான குடும்பப் பிரச்சனை என்று நினைத்துக் கடந்துவிட்டனர். தங்களின் மகள் உள்ளுக்குள் இந்த அளவுக்கு உடைந்து போயிருப்பாள் என்பதை அவர்கள் சற்றும் கணிக்கவில்லை.

இந்நிலையில், தீபிகாவின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டு, வீட்டில் சாந்தி ஹோமம் நடைபெற்றபோது, அவரது தாய் தொடர்ந்து மயங்கி விழுந்தார். “அன்று என் மகளின் வலியை நாங்கள் உணர்ந்திருந்தால், இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாள்” என்று உறவினர்கள் கண்ணீருடன் கதறினர்.

உறவினர்களின் குற்றச்சாட்டின்படி, திருமணமான 13 மாதங்களிலேயே தீபிகா நாகர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கணவர் வீட்டார் தரப்பில் இருந்து வரதட்சணை கேட்டு தொடர்ந்து மிரட்டல்களும் சித்திரவதைகளும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உறவை எவ்வாறாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தீபிகா ஒவ்வொரு முறையும் சமரசம் செய்து கொண்டுள்ளார், இதுகுறித்து வெளியே அதிகம் புகார் கூறவில்லை.

தீபிகாவிற்கு பார்ச்சூனர் கார் மற்றும் ரூ.50 லட்சம் ரொக்கம் கேட்டு மாமியார் தரப்பில் இருந்து கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு முன்னிலையிலேயே, “ஸ்கார்பியோ கார் கொண்டு வந்திருக்கிறாய், பார்ச்சூனர் கார் ஏன் கொண்டு வரவில்லை?” என்று அவரை இழிவுபடுத்தியுள்ளனர். இதற்குத் தீபிகா எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியதும், கொடுமைகள் இன்னும் அதிகரித்துள்ளன.

கணவர் வீட்டாரின் மனிதாபிமானமற்ற அணுகுமுறை குறித்தும் தீபிகாவின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். விபத்து நடந்த பிறகும் தீபிகாவின் மாமியார் மருத்துவமனைக்கு வரவில்லை என்றும், தீபிகாவை மனரீதியாக முடக்குவதற்காக பல மாதங்களுக்கு முன்பே அவருடைய அனைத்து நகைகளையும் மாமியார் பறித்து வைத்துக் கொண்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது தீபிகா வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அன்றைய தினம் டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. அவரது உடலும் ஒரு வலையில் சிக்கி இருந்த நிலையில் இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவிக்கும் நிலையில் பிளே தி பரிசோதனை அறிக்கை வந்தால் உண்மையான காரணம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.