பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர், தனது மனைவி ஷில்பாவுடன் (27) ஐ.டி. துறையில் பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு 1.5 வயது குழந்தையுடன், தற்போது ஷில்பா 7 மாத கர்ப்பமாக இருந்தார். திருமணத்தின் போது ரூ.50 லட்சம் வரதட்சணை பெற்றிருந்த பிரவீன், பின்னர் ஐ.டி. வேலைவிட்டுத் விட்டு பானிபுரி உணவகத்தை தொடங்கினார். இதற்காகவும், ஷில்பாவிடம் கட்டாயமாகக் கேட்டு, ரூ.10 லட்சம் கூட பெற்றார்.
ஆனால் அதன்பின்னரும் தொடர்ந்த வரதட்சணை மனோபாவம் மற்றும் தொல்லை காரணமாக, பிரவீனும், அவரது தாய் சாந்தா மற்றும் தங்கை பிரியா ஆகியோரும் ஷில்பாவுக்கு அடிக்கடி மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஷில்பா, ஏற்கனவே பெற்றோர் வீட்டுக்குச் சென்றும் பின்னர் சமாதானத்தின் பெயரில் மீண்டும் அழைத்து வரப்பட்டிருந்தார். இருந்தும் துன்பங்கள் குறையாத நிலையில், நேற்று தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கணவன் பிரவீன், அவரது தாய் சாந்தா, தங்கை பிரியா ஆகிய மூன்று பேர்மீதும் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தலைமறைவாக இருந்த பிரவீனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
