நாட்டின் கார்ப்பரேட் தலைநகரமாகக் கருதப்படும் குருகிராமில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிக சம்பளம், ஆடம்பர வாழ்க்கை எனப் பல கனவுகளுடன் குடியேறுகின்றனர். ஆனால், அங்குள்ள பளபளக்கும் வானளாவிய கட்டிடங்களுக்குப் பின்னால் வாடகைதாரர்கள் சந்திக்கும் துயரங்கள் நெஞ்சை உலுக்குபவை. அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளமான ரெடிட்டில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
அதாவது குருகிராமின் புகழ்பெற்ற டிஎல்எஃப் (DLF) பகுதிக்கு அருகே உள்ள ஒரு பிளாட்டில், கடந்த ஜனவரி மாதம் மூன்று இளம் ஐடி ஊழியர்கள் குடியேறினர். தங்களை வீட்டின் மேலாளர் என்று கூறிக்கொண்ட ஒரு நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் முன்பணமும், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வாடகையும் முறைப்படி கொடுத்து வந்துள்ளனர். பல மாதங்கள் அனைத்தும் சுமூகமாகச் சென்ற நிலையில், திடீரென ஒரு நாள் இரவு உண்மையான வீட்டு உரிமையாளர் வந்து கதவைத் தட்டியபோதுதான் அந்தப் பயங்கர மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
வாடகை வாங்கிய நபர், வீட்டு உரிமையாளருக்குப் பணத்தைச் செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்ததும் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. நள்ளிரவில் இளைஞர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு உரிமையாளர் மிரட்டியதால், பயந்துபோன அவர்கள் போலீசாரை அழைத்துள்ளனர். ஆனால் போலீசாரோ, இது சிவில் பிரச்னை என்பதால் நீதிமன்றத்தை நாடுமாறு கூறிச் சென்றுவிட்டனர்.
இறுதியில், வெறும் ஒரு வாரக் கெடுவில் அந்த இளைஞர்கள் வீட்டை காலி செய்ய வேண்டியதாயிற்று. அதுமட்டுமன்றி, தாங்கள் கொடுத்த முன்பணத்தையும் திரும்பப் பெற முடியாமல், ஒரு மாத வாடகையையும் இழந்து, ஒரே இரவில் 70 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு தவிப்பதாக அந்த இளைஞர்கள் தங்களின் ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளனர். புதிய வாடகைதாரர்கள் இதுபோன்ற புரோக்கர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அபாய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
