டெல்லி துவாரகாவில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நடந்த சாலை விபத்தில், சாஹில் தனேஸ்ரா என்ற 23 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாஹிலை ஒரு தனி மனுஷியாகக் கஷ்டப்பட்டு வளர்த்த அவரது தாய், தனது மகனை ஒரு மைனர் சிறுவன் ‘ரீல்ஸ்’ எடுப்பதற்காக அதிவேகமாக எஸ்யூவி காரை ஓட்டி வந்து கொன்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். “நான் அனாதையாக நிற்கிறேன், எனக்கு நீதி வேண்டும்” என அவர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் ஒட்டுமொத்த டெல்லியையும் உலுக்கியுள்ளது.

​இந்த விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனைப் போலீஸார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர். ஆனால், அந்தச் சிறுவன் 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காகப் பிப்ரவரி 10-ஆம் தேதி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். உரிமம் இல்லாமல் காரை ஓட்டி, ஸ்டண்ட் செய்து ஒரு உயிரைப் பறித்தவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீஸார், அந்தச் சிறுவன் சமூக வலைதளங்களுக்காக வீடியோ எடுத்தாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.