அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நன்கொடை வசூலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதன் நிர்வாகத்தை வலுப்படுத்த புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோயில் அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜீதேந்திர மிஸ்ரா, ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக மூன்று ஆண்டுகள் காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது ‘ஆபரேஷன் சிந்துர்’ திட்டத்தில் முக்கியப் பங்காற்றி பதக்கம் வென்ற முன்னாள் போர் விமானியாவார்.
தற்போதைய பொருளாளரான கோவிந்த் தேவ் கிரி முழுநேரப் பொதுச் செயலாளராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அதேபோல், டெல்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், எம்2கே குழுமத்தின் தலைவருமான மகேஷ் பக்சந்த்கா அறக்கட்டளையின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராம் ஜன்மபூமி வழக்கில் சட்டப் போராட்டம் நடத்திய உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மதன் மோகன் பாண்டே அறக்கட்டளையின் புதிய உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார். இவரது சட்ட அனுபவம் அறக்கட்டளையின் நிர்வாகத்திற்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஷிகோஹாபாத் பிஜி கல்லூரியின் முன்னாள் முதல்வரும், நீண்டகால ஆர்.எஸ்.எஸ் ஊழியருமான நிர்மலா யாதவ் அறக்கட்டளையின் முதல் பெண் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனங்கள் மூலம் ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என நம்பப்படுகிறது.
