எல்லையைக் காக்கும் பணியில் மட்டுமல்ல, பொதுமக்களின் அவசரத் தேவைக்கும் இந்திய ராணுவம் எப்போதும் துணை நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சான்றாக, மதுரா ரயில் நிலையத்தில் ராணுவ வீரர் ஒருவர் செய்த உதவி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஹோலி பண்டிகையை முடித்துவிட்டு மதுராவிலிருந்து தில்லிக்கு ரயிலில் திரும்புவதற்காக ‘ரூப்’ என்ற பெண் பயணியொருவர் மதுரா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது செல்போனில் பேட்டரி அளவு வெறும் 2 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது. தனது பயணத் தகவல்களைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவருக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவர் வைத்திருந்த பவர் பேங்க் தண்ணீரில் விழுந்து பழுதாகிவிட்டதால், போனை சார்ஜ் செய்ய வழி தெரியாமல் தவித்துள்ளார்.
ரயில் நிலையத்திலிருந்த மூன்று கடைகளில் போனை சார்ஜ் செய்ய அனுமதி கேட்டபோதும், எவரும் உதவ முன்வரவில்லை. காத்திருப்போர் அறை வெகு தொலைவில் இருந்ததால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த சமயத்தில், அருகிலுள்ள நடைமேடையில் ராணுவத் தொடர்வண்டி ஒன்று நின்றிருப்பதைக் கண்டார்.
View this post on Instagram
அங்கே தனது செல்போனை சார்ஜ் செய்து கொண்டிருந்த ராணுவ வீரர் ஒருவரிடம், அந்தப் பெண் தனக்கு 5 நிமிடம் மட்டும் சார்ஜர் உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மக்களின் உதவியைப் பெறத் தவறிய அந்தப் பெண்ணுக்கு, எந்தத் தயக்கமும் இன்றி அந்த ராணுவ வீரர் தனது பவர் பேங்கை வழங்கினார். அந்தப் பெண் தனது பெற்றோருக்குத் தனது இருப்பிடத்தை அனுப்பிவிட்டு, நன்றியுடன் அந்த வீரரிடம் பவர் பேங்கை ஒப்படைத்தார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “யாரும் உதவ முன்வராதபோது, இந்திய ராணுவம் எனக்கு உதவியது. மிகவும் அமைதியாகவும், தன்னலமின்றியும் அவர் செய்த அந்த உதவி என் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “உதவி செய்த அந்த ராணுவ வீரர் யாரென்று தெரியவில்லை, அவர் இந்த வீடியோவைப் பார்த்து எனது நன்றியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று அந்தப் பெண் தனது பதிவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
