உத்தரபிரதேச மாநிலம் மீரட்-டெல்லி விரைவுச் சாலையில் உள்ள காஷி சுங்கச்சாவடியில் புதன்கிழமை நடந்த ஒரு விசேஷமான காட்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களின் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்தபோது, ஊழியர்கள் நேரில் சென்று சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது, சமீபத்தில் சரூர்பூர் பகுதியில் புனி சுங்கச்சாவடியில் ஒரு ராணுவ வீரரிடம் நடந்த கொடூர தாக்குதல் ,முறைகேடு சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. அந்த சம்பவத்தை அடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நடவடிக்கை எடுத்து, அனைத்து சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கும் கண்டிப்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

காஷி சுங்கச்சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தற்போது “வீரர்களுக்கு மரியாதை காட்டுவது கடமை” என ஒரு விழிப்புணர்வு செயல்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

“>

 

கியூப் ஹைவேஸின் சுங்க அதிகாரி அனில் சர்மா மற்றும் மேலாளர் பூபேஷ் தியாகி கூறியதாவது, “ஊழியர்கள் இனிமேல் நாகரிகமாகவும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும், நாட்டை காக்கும் வீரர்களிடம் எந்தவித தவறான நடத்தை இருப்பதை சகிக்க முடியாது” எனவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.

தற்போது, சுங்கச்சாவடிகள் அனைத்தும் பயணிகள் நலனிலும், ராணுவத்திடம் மரியாதையிலும் கவனம் செலுத்தும் புதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.