கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மணாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் சாருமதி (16), நிமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் உயிரிழந்த நிலையில் பள்ளி பேருந்து ஓட்டுனர் மற்றும் விஷ்வேஷ் என்ற மாணவர் பலத்த காயமடைந்தனர். கேட் கீப்பர் ரயில் வரும் சமயத்தில் கேட்டை மூடாமல் தூங்கியதால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறப்படும் நிலையில் ரயில்வே நிர்வாகம் அதனை மறுத்ததோடு பள்ளி ஓட்டுனர் கட்டாயப்படுத்தி தான் கேட்டை திறக்க வைத்தார் எனவும் அதனால்தான் விபத்து நடந்தது என்றும் கூறினர். இந்த விவகாரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விஷ்வேஷ் மற்றும் வேன் ஓட்டுனர் ஆகியோர் தாங்கள் வழக்கமாக செல்லும் வழியில் தான் சென்றதாகவும் அந்த சமயத்தில் கேட் திறந்து கிடந்ததாகவும் தாங்கள் யாரும் கேட்டை திறக்க சொல்லவில்லை எனவும் கூறியுள்ளனர்.

அதோடு விபத்து நடந்த போது கூட கேட் கீப்பர் அங்கு வரவில்லை என பாதிக்கப்பட்ட மாணவர் கூறியுள்ளார். தாங்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவரும் ஓட்டுநரும் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அலட்சியத்தால் மூன்று குழந்தைகளின் உயிர் பறிபோனது மிகவும் வேதனையாக அமைந்துள்ளது.