
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரசாயன ஆசிரியாக பணியாற்றும் 35 வயது நபர் மற்றும் அரசு பள்ளியில் விஞ்ஞான ஆசிரியாக பணியாற்றும் 25 வயது நபர் ஆகிய இருவரும், மெபிட்ரோன் (MD) எனப்படும் மரணகரமான மருந்தை ரகசியமாக தயாரித்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது Breaking Bad தொடரின் கதையைப் போன்றே, நிதி சுமைகளை சமாளிக்கவே இந்த இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன் ரூ.10,000 வாடகைக்கு எடுத்த ஒரு குடியிருப்பை ஆய்வகமாக மாற்றி மருந்தை தயாரித்துள்ளனர்.
கடந்த ஜூலை 8-ஆம் தேதி அதிகாலை, மத்திய போதை மருந்து ஒழிப்பு பணியகம் (NCB) நடத்திய அதிரடி சோதனையில், 780 கிராம் மெபிட்ரோன், பல அசிடோன், பென்சீன், மெதிலமைன் இரசாயனங்கள், ஆய்வுக் கருவிகள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படும் முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அசெட்டோன், பென்சீன், மெதிலமைன், சோடியம் ஹைட்ரஜன் கார்போனேட், ஐசோபுரோபைல் ஆல்கஹால், பிரோமின், 4 மெதில்ப்ரொப்பியோஃபெனோன், என்-மெதில்பைரோலிடோன் போன்ற பெரிய அளவிலான இரசாயனங்கள் மற்றும் உபகரணங்கள் அந்த குடியிருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த இருவரும் தங்கள் தயாரிப்பை மூலதரகர் ஒருவரின் வழியாக விற்பனை செய்ததாக தெரிவித்துள்ள நிலையில், அந்த மத்தியஸ்தர் யார் என்ற விவரத்தை கண்டறிவதற்கான நடவடிக்கையில் NCB ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் டெல்லியில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, NCB இயக்குநர் அனுராக் கர்க் நாடு முழுவதும் உள்ள மாநில காவல்துறை தலைவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கேமரா, மூடிய ஜன்னல்கள், இரசாயன வாசனைகள், அதிக மின்சார நுகர்வு, பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள், வழக்கத்திற்கு மாறான துண்டுப் பொருட்கள் உள்ளிட்ட ரகசிய ஆய்வகங்களை அடையாளம் காணும் ‘red flags’ பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள் என்பதும், கடன் சுமையால் இந்த தவறான வழியில் சென்றனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.