சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைப்பதோடு மட்டுமில்லாமல், அந்த சிறுமியின் தைரியத்திற்காக பலரையும் பாராட்டவும் வைத்திருக்கிறது. அடையாளம் தெரியாத ஒரு நபர், தனியாக நின்றிருந்த சிறுமியிடம் நைஸாகப் பேசி, “உனக்கு புது சைக்கிள் வாங்கித் தாரேன், கையில் 1,200 ரூபாய் காசும் தாரேன், என் கூட வா” என்று ஆசை வார்த்தை கூறி கடத்த முயன்றதாக அந்தச் சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், அந்த மர்ம நபரின் பேச்சை நம்பி ஏமாறாத அந்தப் பெண், சற்றும் யோசிக்காமல் அங்கிருந்து நகர்ந்து, உடனடியாக அருகில் இருந்த பொதுமக்களிடம் சத்தம் போட்டு உண்மையை உடைத்திருக்கிறார்.

​சிறுமியின் இந்த அதிரடி பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் அங்கிருந்து எஸ்கேப் ஆக, நொடிப் பொழுதில் அந்த இடத்தில் ஊர் மக்கள் அத்தனை பேரும் திரண்டு கூடிவிட்டனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது. முன்பின் தெரியாத ஒரு நபர் ஆசை காட்டியபோது, கொஞ்சம் கூட பயப்படாமல் சமயோசித புத்தியுடன் செயல்பட்டு, ஆபத்தில் இருந்து தப்பிய அந்தச் சிறுமியின் தைரியத்தையும், நெஞ்சுரத்தையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.