“ஆன்மீக சக்தியின் முன்னால் எனது திரையுலகப் புகழ் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசினார். பெங்களூருவில் உள்ள ‘வாழும் கலை’ அமைப்பின் 45-ஆம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த காலங்களில் அந்த ஆசிரமத்தில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமத்திற்கு முதன்முதலில் வந்தபோது, இதன் அழகைக் கண்டு வியந்தேன். எங்கு பார்த்தாலும் பசுமை, ஏரி, மகிழ்ச்சியான முகங்கள் என அமைதி நிலவியது. அங்கு ஒரு குதிரைக்கு ‘ரஜினி’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது எனக்கு ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே தங்கத் திட்டமிட்ட நான், அங்கிருந்த சூழலால் ஈர்க்கப்பட்டு 15 நாட்கள் தங்கிவிட்டேன்.

தொடர்ந்து பேசிய அவர், தனது அகந்தையை (Ego) உடைத்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். குருதேவ்(ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னிடம் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்க வருகிறீர்களா எனக் கேட்டார். நான் ஒரு பெரிய நட்சத்திரம் என்பதால், என்னைப் பார்த்தால் கூட்டம் கூடிவிடும், ஆட்டோகிராஃப் கேட்பார்கள், தர்மசங்கடமான சூழல் உருவாகும் என்று தயங்கினேன். ஆனால், அங்கு நடந்ததே வேறு.

ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட அங்கிருந்தனர். நான் அவர்களைப் பார்த்து கைகளை அசைத்தேன். ஆனால், உண்மையைச் சொல்கிறேன். ஒருவர் கூட என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆட்டோகிராஃப், புகைப்படம் எடுப்பதை விடுங்கள், நான் அங்கு இருக்கிறேன் என்பதையே யாரும் பொருட்படுத்தவில்லை. அனைவரும் தியானத்திலும், அந்த ஆன்மீக அதிர்வலையிலும் மூழ்கியிருந்தனர். பல அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களையும் சந்தித்த எனக்கு, அந்த அனுபவம் என் ஈகோவை முற்றிலும் சுக்குநூறாக உடைத்தது என்று கூறினார்.

ஆன்மீகத்தின் மேன்மை குறித்து ரஜினிகாந்த் மேலும் கூறுகையில், திரையுலகப் புகழ் என்பது வந்து போகக்கூடியது. ஆனால், ஆன்மீகப் புகழ் என்பது மிக உயரியது. அது மரணத்திற்குப் பிறகும் நிலைத்து நிற்கும். இன்னும் சொல்லப்போனால் வளர்ந்து கொண்டே இருக்கும். இத்தகைய மகாத்மா (குருதேவ்) அருகில் அமர்ந்திருப்பதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் என்றார்.

மேலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் 1981-இல் தொடங்கப்பட்ட ‘வாழும் கலை’ அமைப்பு, இன்று உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மன அழுத்தம் குறைப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்காக இந்த அமைப்பு உலகளவில் பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.