கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சித்தராமையாவின் ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை (மே 30) பெங்களூரு விதான் சௌதாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் டெல்லி மேலிடத் தலைவர்கள் முன்னிலையில், புதிய முதலமைச்சராகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முறைப்படி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, கர்நாடகாவில் புதிய அரசு அமைப்பது மற்றும் புதிய அமைச்சரவை உருவாக்கம் குறித்து டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் மேலிட உத்தரவின்படியே தான் பதவியை ராஜினாமா செய்ததாகக் குறிப்பிட்ட சித்தராமையா, புதிய முதல்வர் தேர்வுக்குப் பிறகும் கர்நாடக அரசியலிலேயே ஒரு எம்.எல்.ஏ-வாகத் தனது பணியைத் தொடரப் போவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
