கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடந்த அவர், அதில் ரன் சேஸிங்கின் போது மட்டுமே 4,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலியின் இந்த அபாரமான ஆட்டம் குறித்து முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் கூறுகையில், “ரன் சேஸிங்கின் போது கோலியின் மூளை புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான ‘சாச்சா சௌத்ரியை’ விட வேகமாகச் செயல்படுகிறது. அவர் எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும், எப்போது நிதானமாக ஆட வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தெரிந்தவர். ஒரு சராசரி வீரர் தனது வாழ்நாளில் எடுக்கும் 4,000 ரன்களை, கோலி சேஸிங்கில் மட்டுமே எடுத்துள்ளார். அவரை வர்ணிக்க மேதை, ஜாம்பவான் என எந்த வார்த்தைப் போட்டாலும் போதாது” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த கோலி, இந்தப் போட்டியில் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்தார். இதற்காக அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். கோலி மற்றும் படிக்கல் ஜோடியின் அதிரடியால், 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை ஆர்சிபி அணி 19.1 ஓவர்களிலேயே எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் கேகேஆர் அணி 8-வது இடத்திலேயே நீடிக்கிறது.
